அரசியல் சட்டம் அளிக்காத அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தக்கூடாது – மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 2வது நாளாக கோவையில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட நிலையில், அவரது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் சட்டம் அளிக்காத அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஆட்சியர் உள்பட அரசுத் துறை அதிகாரிகளை அழைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தியிருப்பது, மாநிலங்களின் உரிமைகளை தொடர்ந்து பறித்துவரும் மத்திய பாஜக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அமைந்து, மாநில உரிமைகளில் நம்பிக்கை உள்ளோருக்கு வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்து வரும் தமிழகத்தில், மத்திய பாஜக அரசும், ஆளுநரும் போட்டிப்போட்டுக் கொண்டு அரசின் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் அரசியல் சட்டவிரோத முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ள ஸ்டாலின், தமிழகத்தில் அரசு நிர்வாகம் சீர்குலைந்து கொண்டிருப்பதற்கு மத்திய அரசும், ஆளுநரும் தான் பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன